கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்த சுயேச்சை வேட்பாளர்

கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையை சுயேச்சை வேட்பாளர் புறக்கணித்தார். அவர் தாசில்தாரிடம் கொடுத்த மனுவில், தேர்தலில் வெற்றி பெற்றால் அதிகாரிகள் கூறும் நாளில் பதவி ஏற்பேன் என கூறி உள்ளார்.

Update: 2021-04-30 12:51 GMT

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவர் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இவருக்கு கரும்பலகை சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகரனிடம், ஈஸ்வரன் ஒரு மனு கொடுத்தார். 
அந்த மனுவில், மே 2-ந்தேதி(நாளை) வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக 2-ந்தேதி முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் நான் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள மாட்டேன். வீட்டில் இருந்தபடியே வாக்கு எண்ணிக்கையை தெரிந்து கொள்கிறேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால், கொரோனா பாதிப்பு குறையும் பட்சத்தில் அரசு அதிகாரிகள் கூறும் நாளில் பதவி ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்