திருப்போரூர் ஒன்றியத்தில் 7 தடுப்பூசி மையங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் அடுக்குமாடி குடியிருப்புகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் படூர், தாழம்பூர், கேளம்பாக்கம், சிறுசேரி, நாவலூர், மேலக்கோட்டையூர், கோவளம், முட்டுக்காடு புறநகர் பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இதையொட்டி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், திருப்போரூர் ஒன்றியத்தில் தினமும் 1,000 தடுப்பூசிகள் போட வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் இலக்கு நிர்ணயித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதனால், மாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏகாட்டூர் சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட 7 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இது குறித்து திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன் கூறும்போது:-
திருப்போரூர் ஒன்றியத்தில் தினமும் 1,000 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில், முதல்கட்டமாக 7 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும், சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.