18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 1 லட்சம் தடுப்பூசி மருந்துகள் கொள்முதல்; புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

18 வயதுக்கு மேற்பட்டோருக்காக 1 லட்சம் தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Update: 2021-04-30 01:53 GMT

பாரதிதாசன் சிலைக்கு மாலை

பாவேந்தர் பாரதிதாசனின் நினைவுநாளையொட்டி கவர்னர் மாளிகை அருகே உள்ள அவரது சிலைக்கு புதுவை அரசு சார்பில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி பாரதிதாசனின் பேரன் பாரதி, திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டு பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன்பின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1 லட்சம் தடுப்பூசி

புதுவையில் தலைவர்களின் சிலைகள் உள்ள இடத்தை அழகுப்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அரசு சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

நாளை (சனிக்கிழமை) முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக 1 லட்சம் தடுப்பூசி மருந்துகள் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்காக 1 லட்சம் தடுப்பூசி நம்மிடம் உள்ளது. தொற்று பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே கூட்டம் கூடி வெற்றி கொண்டாட்டங்களை தடுக்கும் வகையில் 3-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பட்டினி கிடப்பவர்களுக்கு உணவு

பட்டாசு வெடித்து கொண்டாடுவதை விட பட்டினி கிடப்பவர்களுக்கு சாப்பாடு வழங்கலாம். அவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும். புதுவையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக டாக்டர்கள், நர்சுகள் நியமித்துள்ளோம். ஜிப்மரில் படுக்கைகளை அதிகரிக்க அதிகாரிகளுடன் பேச உள்ளோம்.

ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவக் கழகம் வழிகாட்டுதலை கூற வேண்டும். இந்த மருந்து மட்டும் அல்லாது வேறு சில அவசர தேவைக்கான மருந்துகள் மூலமும் நோயாளிகளை குணப்படுத்த முடியும். தற்போது தமிழக அரசு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் பாராட்டுகிறேன். தற்போது கூட 1,000 ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்