ஏற்காட்டில் தங்கும் விடுதி மேலாளர் மர்ம சாவு
ஏற்காட்டில் தங்கும் விடுதி மேலாளர் மர்மமான முறையில் இறந்தார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நாகலூர் செல்லும் சாலையில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெரியங்கோடு நௌச்சேரியை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவாபிரசாத் (வயது 43) என்பவர் மேலாளராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்த தங்கும் விடுதியில் ஒரு அறையில் தனியாக தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் சிவாபிரசாத் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்றார். நேற்று காலையி்ல் வேலைக்கு வரவில்லை. மதியம் விடுதி பணியாளர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு கதவு மூடிக்கிடந்தது. கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சிவாபிரசாத் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்குப்பதிவு செய்து சிவாபிரசாத் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவாபிரசாத்துக்கு ரம்யா என்ற மனைவியும், 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.