கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை பெற்று கொடுப்பதாக மோசடி; காண்டிராக்டர் கைது
பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை பெற்று தருவதாக கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட காண்டிராக்டர் கைது செய்யப்பட்டார். பெற்றோரை இழந்தவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.;
பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை பெற்று தருவதாக கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட காண்டிராக்டர் கைது செய்யப்பட்டார். பெற்றோரை இழந்தவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
படுக்கை வாங்கி கொடுக்கவில்லை
பெங்களூரு ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஸ்டீபன்ராஜ். இவர், சமூக வலைத்தளங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை பெற்றுக் கொடுக்கப்படும் என்ற தகவலை பார்த்தாா். இதற்கிடையில், ஸ்டீபன்ராஜின் தந்தைக்கும், தாயுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சமூக வலைத்தளத்தில் வந்த தகவலின் பேரில், மணீஷ் சர்கார் என்ற நபரை தொடர்பு கொண்டு ஸ்டீபன்ராஜ் பேசினார்.
அப்போது அவரிடம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை பெற்றுக் கொடுக்க தனக்கு ரூ.20 ஆயிரம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று மணீஷ் சர்கார் கூறியுள்ளார். இதனை நம்பிய அவரும் ரூ.20 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிய அவர், கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஸ்டீபன்ராஜின் தந்தை, தாய்க்கு தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வாங்கி கொடுக்கவில்லை.
காண்டிராக்டர் கைது
இதன் காரணமாக கடந்த 24-ந் தேதி ஸ்டீபன்ராஜின் தாயும், அதற்கு மறுநாள் (25-ந் தேதி) தந்தையும் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிர் இழந்தார்கள். இதையடுத்து, பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டும் மணீஷ் சர்காா் கொடுக்க மறுத்து விட்டார். இதுபற்றி ஜெயநகா் போலீஸ் நிலையத்தில் ஸ்டீபன்ராஜ் புகார் அளித்தார். போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணீஷ் சர்காரை ஜெயநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவரது சொந்த ஊர் மேற்கு வங்காளம் என்றும், பெங்களூரு மல்லேசுவரத்தில் அவா் வசித்து வந்ததும் தெரிந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீட்டு வேலைக்காக ஆட்களை சேர்த்து விடும் காண்டிராக்டராக மணீஷ் சா்கார் இருந்தது தெரியவந்தது. தற்போது கொரோனா காரணமாக நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை கிடைக்காமல் அவதிப்படுவது பற்றி அறிந்ததும், அதனை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதும், ஸ்டீபன்ராஜிடம் ரூ.20 ஆயிரம் வாங்கி மோசடி செய்ததும் தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.