வீடுபுகுந்து 17 பவுன் நகை கொள்ளை

ஆலங்குளம் அருகே வீடு புகுந்து 17 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-04-29 19:59 GMT
விருதுநகர்,
ஆலங்குளம் அருகே வீடு புகுந்து 17 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
கோவில் திருவிழா 
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருேக உள்ள கலைஞர் நகரில் வசிப்பவர் மாரியம்மாள் (வயது 70). இவரது கணவர் குருசாமி இறந்து விட்டார். 
அதன்பிறகு மாரியம்மாள் தனியாக வசித்து வருகிறார்.  அவரது 3 மகள்களில் 2 பேர் அதே பகுதியிலும், ஒருவர் கான்சாபுரம் கிராமத்தில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று கான்சாபுரம் பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. 
பீரோ உடைப்பு 
இதற்காக மாரியம்மாள் மற்றும் அவரது மகள்கள் அங்கு சென்று விட்டனர். திருவிழா முடிந்ததும் அவர்கள் ஊருக்கு திரும்பினர். 
அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு மாரியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு மாரியம்மாளின் மகள் கனகவள்ளி (45) தகவல் கொடுத்தார். இதையடுத்து சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
17 பவுன் நகை கொள்ளை 
வீட்டில் இருந்த 17 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கனகவள்ளி தெரிவித்தார். 
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வீட்டில் இருந்து ஓடிய மோப்ப நாய் அரசு மேல்நிலைப்பள்ளி, டி.எம்.சி. முக்குரோடு வரை சென்று நின்று விட்டது. இந்த சம்பவம் குறித்து கனகவள்ளி அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்