மாவட்டத்தில், இதுவரை 19,100 தபால் வாக்குகள் பெறப்பட்டு உள்ளன- தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 19,100 தபால் வாக்குகள் பெறப்பட்டு இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-04-29 19:49 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், போலீசார் என சுமார் 14 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க உரிய படிவம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தபால் வாக்குகளை அனுப்பி வருகின்றனர். இதற்கிடையே வாக்கு எண்ணும் பணி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருப்பதால் தபால் வாக்குகளை அனுப்பும் பணி தீவிர சுறுசுறுப்பு அடைந்து உள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் என இதுவரை சுமார் 12 ஆயிரம் பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்து அனுப்பி உள்ளனர். இன்னும் 2 ஆயிரம் பேர் தபால் வாக்குகளை அனுப்பவில்லை. நாளை மறுநாள் காலை 8 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்திற்கு தபாலில் வரும் தபால் வாக்குகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு எண்ணப்படும். நேரடியாக தபால் வாக்குகள் வாங்கப்படாது.

இதேபோல் தேர்தல் ஆணையம் இந்த முறை 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்குகள் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. அந்த வகையிலும் சுமார் 7,100 தபால் வாக்குகள் பெறப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 19,100 தபால் வாக்குகள் பெறப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்