கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவி சாவு
கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவி பலியானார். கொரோனா வதந்தி காரணமாக அவருடைய உடல் கோவையில் தகனம் செய்யப்பட்டது.
கோவை,
சேலம் மாவட்டம் வீராணம் அருகே மோட்டூர் காட்டுவளவை சேர்ந்த வர் சீனிவாசன் (வயது 74). விவசாயி. இவருடைய மனைவி ருக்குமணி (60). இவர்களுக்கு துர்க்காதேவி (42) என்ற மகளும், வெங்கடேசன் (39), திருஞானம் (34) ஆகிய மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
சீனிவாசனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருடைய மகன்கள் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கல்லீரல் பிரச்சினை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 17-ந் தேதி அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் சீனிவாசன் கடந்த 27-ந் தேதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மனைவி ருக்குமணி, சீனிவாசனின் உடலை பார்த்து தகறி அழுதபடி துக்கம் தாளாமல் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பலியானார்.
சீனிவாசனின் உடல் சொந்த ஊரான மோட்டூர் காட்டுவளவையில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே ருக்குமணி கொரோனாவால் பலியானதாக தகவல் பரவியதால் சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்ல கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ருக்குமணியின் உடல் கோவை இருகூரில் உள்ள ஒரு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இது குறித்து சீனிவாசனின் உறவினர்கள் கூறுகையில், சீனிவாசன் இறந்த அதிர்ச்சியில் தான் ருக்குமணி இறந்தார்.
ஆனால் அவர் கொரோனா வால் இறந்ததாக கருதி உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி ருக்குமணியின் உடலை கோவையில் தகனம் செய்தோம் என்றனர்.
கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் பலியானார். சாவிலும் இணை பிரியாத தம்பதிகொரோனா வதந்தி காரணமாக அவருடைய உடல் கோவையில் தகனம் செய்யப்பட்டது.