அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா தொற்று திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி,
கொரோனா 2-வது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், வேட்பாளர்கள், அரசு அதிகாரிகள் என யாரும் கொரோனா தாக்குதலுக்கு தப்ப முடியவில்லை.
இந்தநிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான வளர்மதி திருச்சி உறையூரில் உள்ள வீட்டில் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.