அரசியல் கட்சி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை

காரைக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பங்கேற்கும் அரசியல் கட்சி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-04-29 18:16 GMT
காரைக்குடி,

காரைக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பங்கேற்கும் அரசியல் கட்சி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையம்

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்தது. பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, மானாமதுைர(தனி), திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு ஓட்டு எந்திரங்கள் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வருகிற 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

கொரோனா பரிசோதனை

தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்ற கூடிய அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்களுக்கான கொரோனா பரிசோதனை நேற்று காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதி மற்றும் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த பரிசோதனை முகாமில் பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர்.
இதேபோல் மாணவிகள் விடுதியில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமில் கட்சிகளின் முகவர்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர். நேற்று ஒரே நாளில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள 234 முகவர்கள் கலந்துகொண்டு கொரோனா பரிசோதனை செய்தனர்.

மேலும் செய்திகள்