வரையாடுகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள்
வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்வதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.;
வால்பாறை
வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்வதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வால்பாறைக்கு வர தடை
கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன், அங்குள்ள சுற்றுலா மையங்களுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் போலீசார், சுகாதாரத்துறை யினர் தீவிர சோதனை வருகிறார்கள்.
மேலும் வால்பாறையில் தங்கி இருப்பதற்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
வரையாடுகள்
ஆனால் இங்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், தவறான தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு வால்பாறைக்கு வருகிறார்கள். அவ்வாறு வரும் வழியில் மலைப்பாதையில் சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டு இருக்கும் வரையாடுகளை தொந்தரவு செய்து வருகிறார்கள்.
இதனால் மிரண்டு ஓடும் வரையாடுகள் மலைப்பாதையில் இருந்து பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழக்கக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தொந்தரவு செய்வது அதிகரிப்பு
வால்பாறைக்கு வரும் வழியில் வரையாடுகள் அதிகளவில் சாலைஓரத்தில் நின்று மேய்ந்து கொண்டு இருப்பதை பார்க்க முடியும்.
சோதனை சாவடியில் அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு இங்கு வரும் இளைஞர்கள் பலர், வரையாடுகளை பார்த்ததும், வாகனங்களை நிறுத்திவிட்டு அதன் அருகே சென்று புகைப்படம் எடுக்கிறார்கள்.
அத்துடன் அதன் மீது சிறிய கற்களை எறிந்து அதிகமாக தொந்தரவும் செய்கிறார்கள். இதனால் அவை மிரண்டு அங்குமிங்கும் ஓடக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுபோன்று வரையாடுகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறை சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
கடும் நடவடிக்கை
ஆனால் அதையும் மீறி தற்போது இளைஞர்கள் இதுபோன்று செய்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், யாரும் வருவது இல்லை என்று நினைத்து வனத்துறையினர் ரோந்து வருவது கிடையாது.
எனவே இதுபோன்று அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு இங்கு வந்து வரையாடுகளை தொந்தரவு செய்பவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.