கொரோனா அச்சத்தால் உறவினர்கள் வர மறுப்பு: காப்பகத்தில் இறந்த மூதாட்டியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த பெண் புதுக்கோட்டையில் சோகம்

கொரோனா அச்சத்தால் உறவினர்கள் யாரும் வராததால் புதுக்கோட்டையில் காப்பகத்தில் இறந்த மூதாட்டியின் உடலுக்கு இறுதி சடங்கினை பெண் ஒருவர் செய்தார்.;

Update: 2021-04-29 17:36 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது33). இவரது கணவர் விஜயகுமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட மகேஸ்வரி சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்களை மீட்டு பராமரிக்க நேசக்கரம் எனும் காப்பகம் ஒன்றை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினார். இதில் தற்போது 20-க்கும் மேற்பட்ட வயதானோர் உள்ளனர். காப்பகம் தொடங்கப்பட்ட நேரத்தில் புதுக்கோட்டை காமராஜபுரத்தில் ஒரு வீட்டில் திண்ணையில் ஆதரவற்று கிடந்த மூதாட்டியை மீட்டார். அவரது பெயர் வேதம் ஆகும். வாரிசுகள் எதுவும் கிடையாது. ஆதரவற்று கிடந்த மூதாட்டி வேதத்தை மகேஸ்வரி தனது காப்பகத்தில் பராமரித்து வந்தார். அவரது உறவினர்கள் காமராஜபுரம், கீரனூர் மற்றும் திருப்பூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 95 வயதான வேதத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது உறவினர்களுக்கு காப்பகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வந்து பார்த்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று வேதம் இறந்தார். இது குறித்தும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் வரவில்லை. தூரத்து உறவினர் என்ற பெயரில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஒரு சேலையை மட்டும் எடுத்து கொடுத்து மரியாதை செய்துள்ளனர்.

இறந்த மூதாட்டி வேதத்தின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்வதற்கு ஆள் இல்லாமல் போனதால் மகேஸ்வரி தனக்கு தெரிந்த சமூக ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் விரைந்து வந்தனர். இறந்த மூதாட்டியின் உடலை குளிப்பாட்டி, சேலை, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடலை போஸ் நகரில் உள்ள மின்மயானத்தில் எரிக்க திட்டமிட்டனர். ஆனால் அவருக்கு அடையாள அட்டை இல்லாததால் அங்கு எரிக்க முடியாமல் போனது.

இதையடுத்து மாற்று ஏற்பாடு செய்து அடப்பன்வயல் பகுதியில் சுடுகாட்டில் மூதாட்டியின் உடல் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன. அங்கு மூதாட்டியின் உடலுக்கு கொள்ளி வைப்பது யார்? என்ற கேள்வி எழுந்தது. அந்த நேரத்தில் சமூக ஆர்வலரான மகேஸ்வரி தான் எரியூட்டுவதாக தெரிவித்து கொள்ளி வைத்தார். இறுதி சடங்கு காரியங்களை ஆண்களே செய்யக்கூடிய நிலையில் தற்போது ஒரு சில இடங்களில் பெண்களும் முன்வந்து செய்ய தொடங்கி உள்ளனர். அந்த வகையில் புதுக்கோட்டையில் இறந்த மூதாட்டியின் உடலுக்கு பெண் இறுதி மரியாதை செலுத்தி உள்ளார்.

இது குறித்து மகேஸ்வரியிடம் கேட்ட போது, "மூதாட்டி வேதம் இறந்தது குறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போது, கொரோனா அச்சம் காரணமாக வர மறுத்தனர். அதனால் மூதாட்டிக்கு இறுதி சடங்கு மரியாதையை நான் செய்தேன். எனது பராமரிப்பில் அவர் குழந்தை போல இருந்து வந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய நான் இந்த இறுதி சடங்கு காரியத்தை செய்தேன். எனது செயலுக்கு குடும்பத்தினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனக்கு உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தினர். எனது சேவையை தொடர்ந்து செய்ய பாராட்டினர்" என்றார்.

மேலும் செய்திகள்