மாணவியின் உடலை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் போராட்டம்

செஞ்சி தாசில்தாரின் கார் மோதி பலியான மாணவியின் உடலை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் போராட்டம் ஈடுபட்டனர்.

Update: 2021-04-29 17:31 GMT
செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் மணிமேகலை(வயது 15). இவர் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சாலையோரம் நடந்து சென்ற மணிமேகலை மீது, செஞ்சி தாசில்தார் ராஜன் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த மணிமேகலை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் நேற்று மதியம் ஒப்படைக்கப்பட்டது. 
இந்த நிலையில் விபத்தில் பலியான மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூற செஞ்சி தாசில்தார் ராஜன் வரவில்லை, விபத்தை ஏற்படுத்திய அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை வேண்டும், மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  செஞ்சி-விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

உடலை நடுரோட்டில் வைத்து... 

இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி தாசில்தார்(பொறுப்பு) நெகருன்னிசா, துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் நேரில் வரவேண்டும், எங்களது கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும் என்றனர்.  3 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் இரவு 7 மணி அளவில் மாணவியின் உடலை நடுரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இங்கேயே இருப்போம் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், தற்போது போராட்டத்தை ஒத்தி வைத்து செல்கிறோம். உயர் அதிகாரிகள் நேரில் வந்து கோரிக்கைகள் குறித்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மாணவியின் உடலை அடக்கம் செய்வோம் என்று கூறிவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்று விட்டனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்