வாரச்சந்தையில் பொருட்களை விற்க அனுமதிக்க கோரி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்
வாரச்சந்தையில் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி ராமநாதபுரம் நகரசபை அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளது. பல்வேறு கட்டங்களாக கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைபடுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் வகையிலான வாரச்சந்தை நடத்த அரசு தடைவிதித்து உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வாரச்சந்தைகளை மறு உத்தரவு வரும் வரை நடத்த தடைவிதித்து அரசு உத்தரவிட்டுஉள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரச்சந்தைகளை நடத்தக்கூடாது என்று அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் அறிவித்து எச்சரிக்கை விடப்பட்டுஉள்ளது. இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் நகரில் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் வாரச்சந்தை நாள் என்பதால் ஏராளமான வியாபாரிகள் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட தங்களின் விற்பனை பொருட்களுடன் பஸ்நிலையம் அருகில் உள்ள வாரச்சந்தை நடைபெறும் பகுதிக்கு வந்தனர்.
அரசு தடைவிதித்துள்ள காரணத்தினால் போலீசார் மற்றும் நகரசபை நிர்வாகத்தினர் அங்கு நின்று வாரச்சந்தை கிடையாது என்று கூறி திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். கொண்டுவந்த பொருட்களை இறக்கி விற்பனை செய்ய விடாமல் தடுப்பதாக நினைத்த வியாபாரிகள் வாரச்சந்தை பகுதிக்குள் விற்பனை செய்யாமல் வெளியில் சாலையில் வைத்தாவது விற்பனை செய்ய அனுமதிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீசார் மறுத்ததால் வியாபாரிகளுக்கும் போலீசார் மற்றும் நகரசபை அலுவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வியாபாரிகள் ராமநாதபுரம் நகரசபை அலுவலகத்திற்கு சென்று தங்களுக்கு வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக்கோரி முற்றுகையிட்டு வாசல்முன்பு அமர்ந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அனைவரும் சென்று நகரசபை ஆணையாளர் விஸ்வநாதனை சந்தித்து வாங்கி வந்த பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்குமாறும் இல்லாவிட்டால் வட்டிக்கு கடன் வாங்கி கொண்டு வந்த பொருட்களை விற்க முடியாமல் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் கூறி தங்களின் நிலையை கண்ணீர் விட்டு கேட்டனர்.
இதற்கு நகரசபை ஆணையாளர் அரசின் உத்தரவின்படி வாரச்சந்தை மூடப்பட்ட உள்ளதாகவும் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்து அனுப்பிவைத்தார். இதுகுறித்து நகரசபை ஆணையாளரிடம் கேட்டபோது, அரசின் உத்தரவின்படி வாரச்சந்தை மூடப்பட்டுஉள்ளது. எனவே, வெளியில் தெருப்பகுதியில் பொருட்களை அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளின்படி விற்பனை செய்து கொள்ளுமாறு கூறியதாக தெரிவித்தார்.