வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களில் விடுபட்டவர்களுக்கு நேற்று 2-வது நாளாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-04-29 17:08 GMT
விழுப்புரம், 

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் பி.சி.ஆர். சோதனை தேவையில்லை என்றும், முதல் டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்குள் எடுத்துக்கொண்ட பி.சி.ஆர். நெகட்டிவ் பரிசோதனை முடிவுகளை கொண்டு வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் விடுபட்டு போனவர்களுக்கு நேற்று 2-வது நாளாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

2-வது நாளாக பரிசோதனை

அந்த வகையில் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரக்கூடிய வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் என 1,795 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
இவர்களை தவிர கொரோனா பரிசோதனை செய்யாமல் விடுபட்டு போனவர்களுக்கு நேற்று 2-வது நாளாக கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடந்தது. அதன்படி விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் ஆகிய இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு சென்றும், அதுபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் ஆகிய தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடக்கூடியவர்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கும் சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். சிலர், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். 2-வது நாளான நேற்று மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும், இவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகளை பொறுத்து வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று 2-வது நாளாக நடைபெற்ற முகாமில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், அரசு ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 
ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற முகாமில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

மேலும் செய்திகள்