கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் தினம் தினம் புதிய உச்சம் தொடும் கொரோனாவால், நேற்று ஒரே நாளில் 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-04-29 16:56 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதாவது கடந்த பிப்ரவரி இறுதியில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு, அதன் பிறகு 30, 40 என அதிகரித்து கடந்த வாரத்தில் 200, 220 பேர் என பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 249 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஆந்திரா, ஜார்க்கண்ட், சென்னை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து கடலூர் மாவட்டம் வந்த 24 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 90 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 135 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

4 பேர் பலி

நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் 72 வயது பெண். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண், சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 62 வயது முதியவரும், புவனகிரியை சேர்ந்த 44 வயது தொழிலாளியும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 69 வயது முதியவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் 3 பேரும் நேற்று பரிதாபமாக இறந்தனர்.

136 பேர் வீடு திரும்பினர்

மேலும் நேற்று மட்டும் 136 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 312 பேருடைய கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. தற்போது கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ள 1240 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 338 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 68-ல் இருந்து 74 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்