நவீன எந்திரம் மூலம் தினமும்4 ஆயிரம் சளி மாதிரிகள் பரிசோதனை

நவீன எந்திரம் மூலம் தினமும்4 ஆயிரம் சளி மாதிரிகள் பரிசோதனை

Update: 2021-04-29 16:49 GMT
கோவை

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நவீன எந்திரம் மூலம் தினசரி 4 ஆயிரம் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது தினமும் 4 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தினமும் 2 ஆயிரம் பரிசோதனைகள் தான் நடத்தப்பட்டன.

தற்போது கொரோனா 2-வது அலை தாக்கம் அதிகமாக இருப்பதால் கோவை மாவட்டத்தில் தினமும் 10 ஆயிரம் பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. 


ஆனால் அவற்றை பரிசோதிப்பதற்கு தேவையான கட்டமைப்பு இல்லாததால் தனியார் ஆய்வகங்களில் சளி மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டு வந்தன.

நவீன எந்திரம்

இந்த நிலையில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியின் கொரோனா சளி மாதிரிகள் பரிசோதனை செய்யும் திறனை அதிகரிக்க டீன் ரவீந்திரன் முயற்சி செய்தார். இதன்காரணமாக ரூ.20 லட்சம் செலவில் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. 

அந்த எந்திரத்தை பொருத்த கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தான் தொழில்நுட்ப பணியாளர்கள் வர வேண்டும். 

ஆனால் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பெங்களூருவில் இருந்தவாறே காணொளி காட்சி மூலம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நவீன எந்திரம் நேற்று முன்தினம் பொருத்தப்பட்டது.

4 ஆயிரமாக உயர்வு

இது குறித்து இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன் கூறியதாவது

96 வெல் ஆர்.என்.ஏ. எக்ஸ்டிராட்டர் என்று அழைக்கப்படும் இந்த எந்திரத்தில் 30 நிமிடங்களுக்கு 96 சளி மாதிரிகளை போட்டு ஆர்.என்.ஏ. மட்டும் பிரித்தெடுக்கப்படும். அதில் கொரோனா வைரஸ் பல மடங்கு பெரிதாக்கி காட்டப்படும். 

இதன் மூலம் சளிமாதிரியில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.  இந்த புதிய எந்திரத்தின் மூலம் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் இதுவரை பரிசோதிக்கப்பட்டு வந்த சளி மாதிரிகள் 2 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 

இதற்காக கூடுதல் பணியாளர்க ளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் பணி நேரத்தின் போது கவச உடை (பி.பி.இ. கிட்) அணிந்திருப்பார்கள்

இலவசமாக பரிசோதனை

கோவை மாவட்டத்தில் தற்போது மாநகராட்சி மற்றும் மாவட்ட சுகாதார துறை சார்பில் தினமும் 10 ஆயிரம் சளி மாதிரிகள் சேகரிக்கப் படுகின்றன.

 அவற்றில் 4 ஆயிரம் கோவை அரசு ஆஸ்பத்திரி ஆய்வகத்துக் கும், 4 ஆயிரம் சளி மாதிரிகள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கும், மீதி 2 ஆயிரம் மாதிரிகள் தனியார் ஆய்வகங்களுக்கும் பிரித்து கொடுக்கப்படும். 

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் புதிய எந்திரம் பொருத்தப்பட்டு உள்ளதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான சளி மாதிரிகள் இலவசமாகவே பரிசோதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்