கடலூர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வெளியில் வைத்து விற்பனை செய்த ஊழியர்கள்
கடலூர் டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த மதுபாட்டில்களை வெளியில் வைத்து ஊழியர்கள் விற்பனை செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் புதுச்சேரி மாநிலம் உள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது தவிர மதுக்கடைகள், பார்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநில மது பிரியர்கள் கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர். அதன்படி கடலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
மாற்று ஏற்பாடு
சிலர் பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றதையும் பார்க்க முடிந்தது. நேற்று 3-வது நாளாக புதுச்சேரி மது பிரியர்கள் கடலூருக்கு மதுபாட்டில்கள் வாங்க திரண்டனர். கடைகள் திறப்பதற்கு முன்பே வந்து டாஸ்மாக் கடைகள் முன்பு வந்து காத்திருந்தனர். பின்னர் கடைகள் திறந்தவுடன் கூட்டம் அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடாக கடைக்கு வெளியில் குறைந்த விலையில் உள்ள மதுபாட்டில்களை வைத்து தனியாக விற்பனை செய்தனர். அதிக விலைக்கு மது பாட்டில்கள் வாங்கும் நபர்கள் தடுப்பு கட்டை அமைக்கப்பட்ட இடத்தில் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.
இதன் காரணமாக மதிய நேரத்தில் கூட்டம் குறைந்தது. பிறகு மாலை நேரத்தில் ஓரளவு கூட்டம் அதிகரித்தது. நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்கள் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் எடுத்து வருகின்றனர்.