மண்ணில்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளின் தீவனத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று வேளாண் துறையினர் வழிகாட்டியுள்ளனர்.
மண்ணில்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளின் தீவனத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று வேளாண் துறையினர் வழிகாட்டியுள்ளனர்.
போடிப்பட்டி
மண்ணில்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளின் தீவனத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று வேளாண் துறையினர் வழிகாட்டியுள்ளனர்.
பால் உற்பத்தி
நமது பாரம்பரிய விவசாய குடும்பங்களின் முக்கிய அங்கமாக கால்நடை வளர்ப்பு இருந்தது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் இயற்கை முறையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கால்நடைகள் உறுதுணையாக இருக்கிறது. ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் உணவுத் தேவை பூர்த்தியாவதுடன் குடும்ப வருமானமும் அதிகரிக்கிறது. மேலும் பண்ணை மற்றும் வீடுகளின் கழிவுகளைத் தின்னும் கால்நடைகள் அதனை உணவாகவும் உழைப்பாகவும் மனிதர்களுக்குத் திருப்பி வழங்கி வருகிறது. விவசாயத்தில் பசுமைப்புரட்சி நுழைந்தபோது படிப்படியாக கால்நடைகள் வெளியேற்றப் பட்டது. மகசூலை அதிகரிக்கும் நோக்கத்தில் புகுத்தப்பட்ட ரசாயன உரங்கள் மற்றும் நவீன எந்திரங்களால் கால்நடைகளின் தேவை குறைந்தது.தற்போதைய நிலையில் பால் உற்பத்திக்காக மட்டுமே அதிக அளவில் பசுக்கள் வளர்க்கப்படுகிறது.
தீவனத்தட்டுப்பாடு
இந்தநிலையில் மீண்டும் இயற்கை விவசாயம் மீது இளைஞர்களின் பார்வை திரும்பியிருப்பது நல்ல அறிகுறியாகும். மாட்டுச்சாணம் மற்றும் சிறுநீர் மூலம் தயாரிக்கப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளுக்கு மவுசு கூடியுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பு மீண்டும் முக்கியத்துவம் பெறத்தொடங்கியுள்ளது. ஆனால் கால்நடை வளர்ப்பில் தீவனத்தட்டுப்பாடு என்பது பிரச்சினையாகவே உள்ளது. இதனால் கால்நடைகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. கால்நடைத் தீவனத்துக்கென அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு, குறிப்பாக பசுக்களுக்கு அடர் தீவனம், பசுந்தீவனம், உலர் தீவனம் போன்றவற்றை சரியான விகிதத்தில் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில் நாள் ஒன்றுக்கு கால்நடைகளின் உடல் எடையில் 8 முதல் 10 சதவீதம் அளவுக்கு பசுந்தீவனம் அளிக்கப்பட வேண்டும். தீவனச்சோளம், தீவன மக்காச் சோளம், கொழுக்கட்டைப்புல், கம்பு நேப்பியர் புல், எருமைப் புல் போன்ற புல் வகைகளும், அகத்தி, சூபாபுல், குதிரைமசால், வேலிமசால் போன்ற பயறுவகை தீவனப் பயிர்களும் பசுந்தீவனமாகப்பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கோடை காலத்தில் பசுந்தீவன உற்பத்தி சிக்கலானதாக உள்ளது.
தானியங்கள்
அத்தகைய சூழ்நிலையில் ஹைட்ரோ போனிக்ஸ் எனப்படும் மண்ணில்லா தீவன உற்பத்தி கைகொடுப்பதாகவும் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் உள்ளது. இதன்மூலம் குறைந்த இடத்தில் குறைந்த நீரைப்பயன்படுத்தி சத்து மிகுந்த தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த முறையில் சோளம், மக்காச்சோளம், ராகி, கொள்ளு, கம்பு, தட்டைப்பயறு போன்ற எளிதில் கிடைக்கும் தானியங்களைப் பயன்படுத்தி மண்ணில்லாமல் 7 முதல் 8 நாட்களில் சத்துள்ள பசுந்தீவனங்களை உற்பத்தி செய்யலாம். இதற்கென தேர்வு செய்யப்பட்ட விதைகளை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஈரக்கோணிப் பையில் 24 மணி நேரம் கட்டி வைப்பதன் மூலம் முளைப்பைத் தூண்ட வேண்டும். பின்னர் செவ்வக வடிவிலான பிளாஸ்டிக் தொட்டி அல்லது அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக அடுக்குகளில் பரப்பி 5 நாட்கள் வரை தினசரி 2 முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். 7 முதல் 8 நாட்களில் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனம் தயாராகி விடும். ஒரு கிலோ தானியத்தைப் பயன்படுத்தி 7 முதல் 8 கிலோ வரை பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். இவற்றில் மண் மற்றும் குப்பைகளின் கலப்பு இல்லாததால் கால்நடைகள் இவற்றை விரும்பி சாப்பிடும். அத்துடன் பசுக்களுக்கு இவற்றை அளிக்கும்போது அதிக பால் கறப்பதுடன் பாலிலுள்ள கொழுப்புச்சத்து மற்றும் தாதுக்களின் அளவு அதிகரிக்கிறது. ஆடுகளுக்கு இந்த வகை தீவனத்தை அளிப்பதன் மூலம் விரைவில் உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் கால்நடைகளுக்கு சினை பிடிக்கும் தன்மையை அதிகரிக்கிறது. சுமார் 300 சதுர அடி பரப்பளவு இடம் இருந்தால் 800 முதல் 1000 கிலோ வரை பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும். எனவே போதிய நிலமின்மை, வறட்சி, தீவனப்பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் கால்நடை வளர்ப்பைக் கைவிடும் விவசாயிகளுக்கு இந்த மண்ணில்லா தீவன உற்பத்தி சிறந்த மாற்றாக இருக்கும். எனவே இதனை ஊக்கப்படுத்தவும் விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் கால்நடைத்துறையினர் மற்றும் வேளாண்துறையினர் இணைந்து திட்டம் வகுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தநிலையில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக இறுதியாண்டு இளங்கலை மாணவிகள் புதிய தொழில் நுட்பத்தில் மண்ணில்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி குறித்து உடுமலை பகுதி விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர்.