இரிடியம் என ஏமாற்றி வெண்கல குடத்தை வாங்க கூறி விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது கார் பறிமுதல்
கே.என்.பாளையம் அருகே இரிடியம் என ஏமாற்றி வெண்கல குடத்தை வாங்க கூறி விவசாயிக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
டி.என்.பாளையம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 29). விவசாயி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வந்து ஈரோடு மாவட்டம் கே.என்.பாளையத்தை சேர்ந்த கணேசன் அதிசய இரிடியம் ஒன்று வைத்துள்ளதை நான் பார்த்தேன். டார்ச் லைட்டை எரியவிட்டு இரிடியம் அருகில் கொண்டு சென்றால் தானாக லைட் ஆப் ஆகிவிடும். அதை வாங்கினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராமச்சந்திரன் அதை வாங்குவதற்காக தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை காரில் கே.என்.பாளையத்தில் உள்ள கணேசன் வீட்டுக்கு சென்றார். அப்போது கணேசன் அவரிடம் இதுதான் இரிடியம் என ஒரு சிறிய வெண்கல குடத்தை காண்பித்தார். இதனை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.
ஆனால் அதைப்பார்த்த ராமச்சந்திரனோ எனக்கு இது வேண்டாம் எனக்கூறி உள்ளார். இதனால் கணேசன் அவரிடம், இரிடியத்தை வாங்காமல் சென்றால் எனது காரை ஏற்றி உன்னை கொன்று விடுவேன் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
உடனே ராமச்சந்திரன் தனது காரை எடுத்து கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.
இதுகுறித்து ராமச்சந்திரன் பங்களாப்புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் மற்றும் மோசடி செய்ததாக கணேசனை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து இரிடியம் எனக்கூறிய வெண்கல குடம், டார்ச்லைட்் மற்றும் அவரது கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கணேசனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.