தளி வனப்பகுதியில் குட்டிகளுடன் ஏரியில் தண்ணீர் குடித்த யானை கூட்டம்
தளி வனப்பகுதியில் உள்ள ஏரியில் குட்டிகளுடன் வந்து யானை கூட்டங்கள் தண்ணீர் குடித்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் வாழும் காட்டு யானைகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் கோடையை சமாளிக்க நீர் நிரம்பியுள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து வருகின்றன.
வனத்துறையினரும் வனப்பகுதியின் பல இடங்களில் குட்டைகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி விலங்குகளின் குடிநீர் தாகத்தை தீர்த்து வருகின்றனர். இந்தநிலையில் தளி வனப்பகுதியில் சென்னமாலம் என்ற கிராமத்தின் அருகே சின்னையன் ஏரியில் மழை பெய்து அதிக அளவில் தண்ணீர் உள்ளது.
இந்த ஏரிக்கு அடிக்கடி வரும் காட்டு யானைகள் கூட்டம் தண்ணீர் குடித்து தாகத்தை போக்கி செல்கின்றன. அதேபோல நேற்று குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட யானைகள் கோடை வெயிலை சமாளிக்க ஏரிக்குள் இறங்கி தண்ணீர் குடித்து தாகத்தை தணித்தன. நீண்ட நேரம் யானைகள் கூட்டம் குட்டிகளுடன் ஏரியில் உள்ள தண்ணீரை குடித்து மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் அந்த யானைகள் அனைத்தும் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றது.