வாழமூலா கிராமத்துக்கு மின்சார வசதி கிடைக்குமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சட்டப்பிரிவு-17 வகை நிலத்தில் உள்ள வாழமூலா கிராமத்துக்கு மின்சார வசதி கிடைக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2021-04-29 14:28 GMT
கூடலூர்

சட்டப்பிரிவு-17 வகை நிலத்தில் உள்ள வாழமூலா கிராமத்துக்கு மின்சார வசதி கிடைக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சட்டப்பிரிவு-17 வகை நிலங்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனத்துறைக்கு அல்லது வருவாய்த்துறைக்கு என முடிவு செய்யப்படாத சட்டப்பிரிவு-17 வகை நிலங்கள் உள்ளது. இங்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதித்து உள்ளனர். இதனால் ஏராளமான கிராமங்களில் மின்சார வசதி கிடையாது. 

குறிப்பாக கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாலா அருகே வாழமூலா, வாழவயல், அட்டி ஆகிய கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இந்த கிராமங்களில் சட்டப்பிரிவு-17 வகை நிலங்கள் என்பதால், மின்சார வசதி கிடையாது. இதனால் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளுக்கு கூட மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

வனவிலங்குகள் நடமாட்டம்

இது தவிர மின்சார வசதி இல்லாததால் போதிய தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் இரவில் இருளில் நடந்து செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது. இதேபோன்று போதிய வெளிச்சம் இல்லாததால் இரவில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 

இதனால் இருளில் வனவிலங்குகள் நிற்பதை கூட காண முடியாமல் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. இதனால் உயிர் சேதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

 இதை தவிர்க்க மேற்கண்ட கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மின்சார வசதி?

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பல ஆண்டுகளாக மின்சார வசதி இன்றி வாழ்ந்து வருகிறோம். மேலும் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. 

இதனால் எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்