காரமடை நால்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சிக்னல் அமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை
காரமடை நால்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சிக்னல் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காரமடை,
காரமடையில் நால்ரோடு பகுதி உள்ளது. இந்த வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர், அவினாசி செல்லும் வாகனங்கள், காரமடை, சிறுமுகையில் இருந்து வரும் வாகனங்கள் சென்று வருகின்றன.
தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதன் அருகில்தான் மார்க்கெட்டும் உள்ளது. ஆனால் இந்த பகுதியில் இதுவரை சிக்னல் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கோவையில் இருந்து ஊட்டி செல்பவர்களில் சிலர் இந்த சாலை வழியாகதான் செல்கிறார்கள். ஆனால் இந்த 4 வழி சந்திப்பில் இதுவரை சிக்னல் அமைக்கப்படவில்லை.
இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் சிறுமுகை மற்றும் காரமடையில் இருந்து செல்லும் வாகனங்கள் சாலையை கடக்க முயற்சி செய்யும்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அடிக்கடி விபத்துகள் நடப்பதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
எனவே இதை தடுக்க இங்கு சிக்னல் அமைக்க வேண்டும் என்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு சிக்னல் அமைத்து, விபத்துகள் நடப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.