ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை; புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை என்று சுகாதாரத்துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்து
புதுச்சேரி சுகாதாரத்துறை செயலரும், மருந்து கட்டுப்பாட்டுத்துறை தலைவருமான அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து அனைவருக்கும் வெளிப்படை தன்மை மற்றும் நியாயமான விலையில் கிடைக்கும் நோக்கத்தில் சில உத்தரவுகள் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ரெம்டெசிவிர் மருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார்புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் தங்களிடம் உள்ள ரெம்டெசிவிர் மருந்து இருப்புகளை தினந்தோறும் அறிக்கையாக தயார் செய்து புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசு உரிமம் இல்லாமல் ரெம்டெசிவிர் மருந்துக்களை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ரெம்டெசிவர் மருந்து வினியோகத்தை மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறையின் மூலம் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.