கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட 9.17 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,500; வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது
கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட 9.17 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,500 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக மந்திரி ஹசன் முஷ்ரிப் தெரிவித்தார்.;
நிவாரண தொகுப்பு
மராட்டியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தவும், பரவல் சங்கிலியை உடைக்கவும் மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதையடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,476 கோடிக்கு நிவாரண தொகுப்பை அறிவித்தார். இதன்முலம் பதிவுசெய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1,500, உரிமம் பெற்ற ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.1,500, இதேபோல பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500-ம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மந்திரி தகவல்இந்தநிலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,500 வழங்கும் திட்டத்தை மராட்டிய அரசு செயல்படுத்தி உள்ளது.
இதுபற்றி தொழிலாளர் நலத்துறை மந்திரி ஹசன் முஷ்ரிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மராட்டிய அரசு கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி 4 நாட்களில் 9.17 லட்சம் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.1,500 வீதம் ரூ.137.61 கோடி நிவாரணமாக செலுத்தப்பட்டு உள்ளது.
மராட்டிய கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.