11 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பரிசோதனை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து அதன் முடிவில் நோய் தொற்று இல்லை என்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் சுமார் 2 ஆயிரம் அரசு அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி நேற்று நடந்தது. பல இடங்களில் அலுவலர்கள் , முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
சேலம் தெற்கு தொகுதி
சேலம் தெற்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு நேற்று கோட்டை மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அலுவலர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்து கொண்டனர்.
இதேபோல், சேலம் வடக்கு, சேலம் மேற்கு, மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மையங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா? இல்லையா? என்ற விவரம் இன்று (வியாழக்கிழமை) தெரியவரும் என்றும், பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.