வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்-கலெக்டர் ராமன் தகவல்
வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.
சேலம்:
வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு எண்ணிக்கை வருகின்ற 2-ந்தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 4 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு அதற்கான சான்றிதழ்களை வாக்குப்பதிவு நாளன்று வைத்திருக்க வேண்டும்.
தயார் நிலையில் இருக்க வேண்டும்
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 14 மேஜைகளும், 1 தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜையும், என மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 165 மேஜைகள் போடப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் தனியாக மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 594 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். பணியாளர்கள் 2-ந்தேதி காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருகை தந்து கட்டுப்பாட்டு கருவியின் வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
8 மணிக்கு...
பின்னர் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு காலை 7.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். காலை 7.55 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் அனைவரும் வாக்கு எண்ணிக்கையின் ரகசிய காப்பு உறுதிமொழியினை ஏற்க வேண்டும். அதன்பின், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதனை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.