ஏரியில் மூழ்கி சிறுமி சாவு; காப்பாற்ற முயன்ற மாமாவும் உயிரிழந்த சோகம்

குடகு அருகே ஏரியில் மூழ்கி சிறுமியும், அவளை காப்பாற்ற முயன்ற மாமாவும் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2021-04-28 21:46 GMT
குடகு: குடகு அருகே ஏரியில் மூழ்கி சிறுமியும், அவளை காப்பாற்ற முயன்ற மாமாவும் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது. 

ஏரியில் மூழ்கி சாவு 

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சனிவாரசந்தே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குடுங்கோலா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 27). இவரது சகோதரியின் மகள் சந்தனா(12). 

இந்த நிலையில் நேற்று காலை கிராமத்தில் உள்ள ஏரியில் சந்தனாவும், வெங்கடேசும் குளிக்க சென்றனர். அவர்கள் 2 பேரும் ஏரிக்கரையில் நின்று குளித்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ஏரிக்குள் தவறி விழுந்த சந்தனா நீச்சல் தெரியாததால் தத்தளித்து கொண்டு இருந்தாள். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ், சந்தனாவை காப்பாற்ற ஏரிக்குள் குதித்தார். ஆனால் அவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் ஏரியில் மூழ்கி இறந்து விட்டனர். 

சோகம்

இதுபற்றி அறிந்த சனிவாரசந்தே போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் ஏரியில் மூழ்கி இறந்த சந்தனா, வெங்கடேசின் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 2 பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த காட்சி கிராம மக்களை கண்கலங்க வைத்தது. 

பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சனிவாரசந்தே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி சிறுமியும், அவளை காப்பாற்ற முயன்ற மாமாவும் இறந்த சம்பவம் குடுங்கோலா கிராமத்தில் பெரும் சோகத்ைத ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்