பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3,000 பேர் தலைமறைவு
பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3,000 பேர் தலைமறைவாகிவிட்டதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3,000 பேர் தலைமறைவாகிவிட்டதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
2-வது அலை
கர்நாடகத்தில் கொரோனா தனது 2-வது அலையை வீச தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும் கொரோனா பரிசோதனை செய்ய இலக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரெயில், பஸ் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை பிடித்து வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானால் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்ற பயத்தில் பெயர், செல்போன் எண்களை மாற்றி கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3 ஆயிரம் பேர் தலைமறைவாக உள்ளதாக மந்திரி ஆர்.அசோக் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தலைமறைவு
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. பெங்களூருவில் கொரோனா பரிசோதனை முடிவுகள் அவரவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது. இதில் கொரோனா பாதிப்பு உறுதியான நோயாளிகள் சுமார் 3,000 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் தங்களின் வீடுகளை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.
அவர்களை தேடி கண்டுபிடிப்பது பெரும் சவாலான ஒன்று. அவர்கள் தங்களின் செல்போனை அணைத்து வைத்து உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் போலீசார் மூலமும் அவர்களை தேடி கண்டுபிடிப்பது கடினம். கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் தயவு செய்து மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு தலைமறைவாகிவிடுவது சரியான நடவடிக்கை அல்ல.
ஊரடங்கை நீட்டிக்கும் நிலை
அவர்கள் தங்களுக்கு உடல்நிலை மோசமாகும்போது தான் செல்போனை இயங்கு நிலையில் வைக்கிறார்கள். இவ்வாறு செய்தால் எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை யோசித்து பாருங்கள். இவ்வாறு தலைமறைவு ஆவதால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும். கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் யாரும் தயவு செய்து செல்போன்களை அணைத்து வைக்க வேண்டாம் என்று கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
கர்நாடகத்தில் தற்போதைக்கு 14 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம். கொரோனா கட்டுக்குள் வந்தால் ஊரடங்கை நீட்டிக்கும் நிலை இருக்காது. ஒருவேளை கொரோனா பரவல் இதே நிலையில் சென்றால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா மந்திரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்பார். பெங்களூருவில் இதுவரை 12 கொரோனா கண்காணிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிக கட்டணம்
கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு எவ்வளவு கட்டணம் நிர்ணயித்து உள்ளதோ அந்த அளவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3 ஆயிரம் பேர் தலைமறைவாக உள்ளதாக மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.