சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோழி இறைச்சி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி வலியுறுத்தல்
தமிழகத்தில் கோழி இறைச்சி கடைகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி வலியுறுத்தி உள்ளது.
நாமக்கல்:
தமிழகத்தில் கோழி இறைச்சி கடைகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி வலியுறுத்தி உள்ளது.
கறிக்கோழி விலை சரிவு
தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்று காரணமாக சரிந்திருந்த கறிக்கோழி வளர்ப்பு தொழிலானது சற்று மீண்டு வரும் நிலையில் 2-வது அலையினால் மீண்டும் முன் எப்போதும் இல்லாத சரிவை சந்தித்து கொண்டிருக்கிறது. இதனால் சுமார் 50 ஆயிரம் பண்ணையாளர்கள் நேரடியாகவும், 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கறிக்கோழி பண்ணை விலை கிலோ ரூ.120-க்கு விற்ற நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கிலோ ஒன்றுக்கு ரூ.65 ஆக குறைந்து உள்ளது. ஆனால் உற்பத்தி செலவானது வரலாறு காணாத அளவில் ஏற்றம் கண்டு உள்ளது. கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ.65 உற்பத்தி செலவு இருந்தது, தற்போது ரூ.100-க்கும் மேலே அதிகரித்து உள்ளது.
கோடை வெப்பம்
வார உற்பத்தியில் 70 சதவீதம் தமிழகத்திலும், மீதி அண்டை மாநிலமான கேரளாவிலும் விற்பனையாகி கொண்டிருக்கிறது. சாதாரணமாக கறிக்கோழி நுகர்வின் 90 சதவீதம் வார இறுதி நாட்களில் விற்பனை ஆகி கொண்டிருந்த நிலையில், தற்போது அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோழி இறைச்சி கடைகள் திறக்க தடை போன்ற கடுமையாக கட்டுப்பாடுகளால் எங்கள் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டு கறிக்கோழி விற்பனை மேலும் சரிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
உயிர் சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் உடனடியாக உற்பத்தி குறைப்பு என்பது இயலாத காரியமாகும். முட்டை பொறிக்கும் காலம், கோழி வளர்ப்பு காலம் ஆக சுமார் 65 நாட்கள் ஒரு தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக தான் கறிக்கோழி விற்பனைக்கு வருகின்றன.
சந்தைக்கு வரும் கோழிகளை தாமதிக்கும் பொருட்டு பண்ணைகளிலேயே 42 நாட்களுக்கு மேல் வைத்திருந்தால், தற்போது நிலவும் அதிக கோடை வெப்பம் காரணமாக இறப்பு விகிதம் அதிகளவில் ஏற்படுகின்றது.
கடையை திறக்க அனுமதி
இவ்வாறாக மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் அதிக உற்பத்தி செலவு, டீசல் விலையேற்றத்தால் அதிக செலவீனம், விற்பனை விலை குறைவு, அதிக இறப்பு விகிதம் என பலமுனை தாக்குதல்களால் சிரமப்பட்டு கொண்டிருக்கும் கறிக்கோழி தொழிலானது, தற்போது அரசு அறிவித்திருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடை திறக்க தடையால் எங்களின் தொழில் மொத்தமும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் உள்ளது.
எனவே கோழி இறைச்சி கடைகளை மாநிலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்து வியாபாரம் செய்திட அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.