டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் ரெம்டெசிவிர் மருந்து எடுக்கக்கூடாது; மந்திரி சுதாகர் பேட்டி
டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கொரோனா நோயாளிகள் ரெம்டெசிவர் மருந்தை எடுக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு: டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கொரோனா நோயாளிகள் ரெம்டெசிவர் மருந்தை எடுக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆலோசனை வழங்கப்படும்
கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவரின் செல்போனிற்கு ஆப்தமித்ர மையத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். சிலர் தங்களின் செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து கொள்கிறார்கள். அவர்களை கண்டுபிடிக்க போலீசாருக்கு தகவல் தெரிவிக்கிறோம்.
3 லட்சத்தை கடந்துவிட்டது
கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்க பெங்களூருவில் மட்டும் 8 ஆயிரம் பேர் தேவைப்படுகிறார்கள். ஒருவரிடம் 10 நிமிடங்கள் வரை பேச வேண்டிய நிலை உள்ளது. மத்திய அரசு 1.22 லட்சம் டோஸ் ரெம்டெசிவர் மருந்து வழங்கியுள்ளது. மாநிலத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துவிட்டது. ரெம்டெசிவர் மருந்து, தேவை உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும். அந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் எடுக்கக்கூடாது.
மத்திய அரசு 800 டன் ஆக்சிஜன் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு முழுமையாக ஆக்சிஜன் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஆக்சிஜன் தேவைப்படும்
ஓய்வுபெற்ற டாக்டர்கள், வீடுகளில் இருந்தபடியே நோயாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கலாம். ஆக்சிஜன் தேவைப்படும் தனியார் மருத்துவமனைகள் ஆன்லைன் மூலமாக கோரிக்கை விடுக்கலாம்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.