கந்தம்பாளையம் அருகே ஊரக வேலைஉறுதித்திட்ட பணியாளர்கள் சாலை மறியல்

கந்தம்பாளையம் அருகே ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-28 20:57 GMT
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே தேசிய ஊரக வேலைஉறுதித்திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொரோனா பரிசோதனை
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள திடுமல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டத்தின் கீழ் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பணியாளர்கள் காலை 9 மணிக்கு ஊராட்சி அலுவலகத்திற்கு வேலைக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு வேலை ஏதும் கொடுக்காமல் அங்கு அமர வைக்கப்பட்டனர். 
இதையடுத்து, மதியம் 12 மணி அளவில் ஊராட்சி பணியாளர்கள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களுக்கு இன்று உங்களுக்கு வேலை இல்லை என்றும், அனைவரும் வீட்டுக்கு செல்லுமாறும் கூறினர். இதுகுறித்து ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் காரணம் கேட்ட போது, திடுமல் ஊராட்சிக்கு அருகில் உள்ள புதுப்பாளையம் கரும்பு ஆலையில் 13 பேரை கொரோனா பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடுமல் ஊராட்சியில் ஊரக வேலைஉறுதித்திட்ட பணியாளர்களுக்கு  வேலை இல்ைல என ஊராட்சி பணியாளர்கள் கூறியதாக தெரிகிறது. 
 எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வேலை இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த ஊரக வேலைஉறுதித்திட்ட பணியாளர்கள் கந்தம்பாளையம்-கபிலர்மலை சாலையின் நடுவே கற்களை வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
 இதுகுறித்து தகவல் அறிந்து கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் முனியப்பன், நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த நாளுக்கான சம்பளம் வழங்குவதாகவும், வேலை குறித்து இனி உரிய தகவல் கொடுக்கப்படும் எனவும் கூறினர். இதில் சமாதானமான பணியாளர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்