மதுபான கடைகளை திறக்கும் நேரத்தை மாற்ற வேண்டும்; அரசுக்கு, மது பிரியர்கள் வேண்டுகோள்
காலையிலேயே மதுபானம் விற்பனை செய்வதால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும், அதனால் மதுபான கடைகளை திறக்கும் நேரத்தை மாற்ற வேண்டும் எனவும் அரசுக்கு மது பிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெங்களூரு: காலையிலேயே மதுபானம் விற்பனை செய்வதால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும், அதனால் மதுபான கடைகளை திறக்கும் நேரத்தை மாற்ற வேண்டும் எனவும் அரசுக்கு மது பிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுக்கடைகளில் குவிந்தனர்
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், அதனால் உண்டாகும் உயிர் பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதையடுத்து, நேற்று முதல் வருகிற 11-ந் தேதி கர்நாடகத்தில் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணியில் இருந்து காலை 10 மணிவரை அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதுபோல், மதுபான கடைகளையும் காலை 6 மணியில் இருந்து காலை 10 மணிவரை 4 மணிநேரம் திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் காய்கறி, பழங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க காலையில் 6 மணியில் இருந்தே கடைகள் முன்பு மக்கள் குவிந்திருந்தனர். அதுபோல், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் முன்பு மதுபிரியர்கள் குவிந்திருந்தனர். வரிசையில் நின்று அவர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். பெரும்பாலும் நகர்புறங்களில் மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வீட்டுக்கு வாங்கி சென்றார்கள்.
நேரத்தை மாற்ற வேண்டும்
ஆனால் பெங்களூரு தவிர மற்ற மாவட்டங்களில், மதுபான விடுதிகள் திறக்கப்படாதால், மதுபாட்டில்களை வீட்டுக்கு கொண்டு செல்லாமல், மதுபான கடைகள் அருகேயே மதுபிரியர்கள் நின்றபடியே மதுபானம் அருந்தினார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் மதுபான கடைகளுக்கு அருகே நின்று காலையிலேயே மதுபானம் வாங்கி மது பிரியர்கள் அருந்துவதை பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் காலையிலேயே மதுபான கடைகள் திறப்பதற்கு மதுபிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுபான கடைகள் திறக்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று மதுபிரியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
கொப்பல், பெலகாவியை சேர்ந்த மதுபிரியர்கள் கூறும் போது, "ஊரடங்கின் போது மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்திருப்பதை வரவேற்கிறோம். காலையிலேயே கடைகளை திறப்பதால், மதுபானத்தை அருந்திவிட்டு எங்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் காலை 6 மணிக்கு மதுக்கடைகளை திறப்பதற்கு பதில், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மதுக்கடைகள் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். தற்போது காலையிலேயே மதுஅருந்துவதால் வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. வேலைக்கு சென்றுவிட்டு இரவில் மதுஅருந்தினால், சாப்பிட்டு தூங்கி விடுவோம். எந்த பிரச்சினையும் வராது, " என்றார்கள்.