ஈரோடு ரெயில் நிலையத்தில் தரையில் உட்கார வைக்கப்படும் பயணிகள் மனித நேயமற்ற செயல் என்று கண்டனம்
ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளை மனிதநேயமற்ற முறையில் தரையில் உட்கார வைப்பதாக கண்டனம் எழுந்து உள்ளது.
ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளை மனிதநேயமற்ற முறையில் தரையில் உட்கார வைப்பதாக கண்டனம் எழுந்து உள்ளது.
ரெயில் டிக்கெட் முன்பதிவு
ஈரோடு ரெயில் நிலையம் தினசரி 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்லும் பெரிய நிலையமாகும். தற்போது கொரோனா பரவலால் 10 முதல் 20 ரெயில்கள் மட்டுமே வந்து செல்கின்றன. இந்த ரெயில்களிலும் முன்பதிவு இருந்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும். எனவே ரெயிலில் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் முன்னதாக ரெயில் நிலையத்துக்கு வந்து டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
தற்போது கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளியை பின்பற்ற அனைத்து இடங்களிலும் அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி ஈரோடு ரெயில் நிலையத்திலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அங்கு உள்ள அனைத்து இருக்கைகளையும் தலைகுப்புற போட்டுவிட்டு, தரையில் 2 மீட்டர் இடைவெளியில் கட்டம் போடப்பட்டு இருக்கிறது.
தரையில் உட்கார அறிவுறுத்தல்
அந்த கட்டிடத்துக்குள் தனி நபர் ஒருவர் உட்கார வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். பயணிகள் தரையில் உட்கார்ந்து, அடுத்த கட்டத்தில் இருப்பவர் சென்றதும் எழும்பி மீண்டும் அந்த கட்டத்தில் உட்கார வேண்டியது உள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல் என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்கள், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். தற்போது கொரோனா பரவல் காலம் என்பதால் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு வேலை செய்து வந்த பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்.
ரெயிலில் எப்படியாவது இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ரெயில் நிலையத்துக்கு நேரடியாக வந்து டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். ஆன்லைன் மூலம் கணினியில் முன்பதிவு செய்து, அந்த டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வைத்து ரெயிலில் பயணம் செய்ய முடியாது.
மனிதநேயமற்ற செயல்
ஆனால் ரெயில் நிலையத்தில் எடுத்த டிக்கெட் காத்திருப்பு நிலையில் இருந்தாலும் பயணம் செய்ய முடியும். எனவே டிக்கெட் உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ள பெரும்பாலானவர்கள், பயணத்தின் அவசரம் கருதி ரெயில் நிலையத்துக்கு நேரடியாக வந்து டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.
அப்படி வரும் பயணிகளை சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்துவது சரி. ஆனால், அவர்கள் தரையில் உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மனிதநேயமற்ற செயலாகும். ஒருவர் எத்தனை முறை உட்கார்ந்து உட்கார்ந்து எழும்ப முடியும். அதுவும் தரையில் உட்கார்ந்து எழும்புவது சிரமம் இல்லையா... குறிப்பிட்ட இடைவெளியில் ஒற்றை நாற்காலிகளை போட்டு அதில் உட்கார்ந்து பயணிகளை டிக்கெட் வாங்க அனுமதிக்கலாமே... அதை விடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதை ரெயில்வே அதிகாரிகள் கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.