கண்மாயில் மீன்பிடி விழா
மேலூர் அருகே இரவில் கண்மாயில் மீன்பிடி விழா நடந்தது. அப்போது மீன்களை போட்டி போட்டு பிடித்து சென்றனர்
மேலூர்
மேலூர் அருகே இரவில் கண்மாயில் மீன்பிடி விழா நடந்தது. அப்போது மீன்களை போட்டி போட்டு பிடித்து சென்றனர்.
மீன்பிடி திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவை அடுத்து சித்தர்கள் வாழ்ந்த பிரசித்தி பெற்ற சோமகிரி மலை உள்ளது. இதன் அருகே பிரம்புக்கண்மாயில் உள்ள மீன்களுக்கு பலவித நோய்களை போக்கும் மருத்துவ குணம் இருப்பதாக நம்பிக்கை உண்டு.
இதனால் இந்த பிரம்புக்கண்மாயில் தண்ணீர் வற்றியவுடன் நடைபெறும் மீன்பிடி திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கான பேர் ஆண்டுதோறும் கலந்து கொள்வது வழக்கம் ஆகும்.
போட்டி போட்டு
இந்தநிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. இதற்கிடையே இந்த கண்மாயில் தண்ணீர் வற்றியதை அடுத்து இரவில் மீன்பிடிக்கலாம் என தகவல் பரவியது. இதனையடுத்து நத்தம், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சிங்கம்புணரி, திருப்பத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கார், மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தவர்கள் பிரம்புக்கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். மருத்துவ குணம் உள்ள மீன்கள் என்ற நம்பிக்கையில் இரவில் இருட்டிலும் கண்மாய் தண்ணீரில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு நூற்றுக்கணக்கான பேர் மீன்களை பிடித்து சென்றனர்.