ஓசூர் அருகே பணம் கேட்டு மர வியாபாரி காரில் கடத்தல் - வாலிபர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
ஓசூர் அருகே பணம் கேட்டு மர வியாபாரியை காரில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பைரமங்கலம் ஜங்ஷன் பகுதியில் காரில் ஒருவர் கடத்தப்பட்டதாக டவுன் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் அமீரியா ஜங்ஷன் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் வந்த 2 பேர் தப்பி ஓடினார்கள். அவர்களால் கடத்தப்பட்ட தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கவுண்டனூர் தெருவை சேர்ந்த மர வியாபாரி கிருஷ்ணன் (வயது 37) என்பவரை போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-
கடத்தப்பட்ட கிருஷ்ணன் அரிசி கடத்தல் வழக்கில் கைதாகி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது அதே சிறையில் மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த மல்லேஷ் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணனை தொடர்பு கொண்டு பைரமங்கலம் கூட்ரோட்டிற்கு மல்லேஷ் அழைத்தார்.
இதனால் தனது காரில் கிருஷ்ணன் அங்கு சென்றார். ஏற்கனவே அங்கு காத்திருந்த மல்லேஷ் மற்றும் அவரது நண்பரான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி நகரை சேர்ந்த கவுரிசங்கர் (32) உள்பட 3 பேர் பணம் கேட்டு கிருஷ்ணனை காரில் கடத்தினர்.
அவரிடம் பணம் இல்லாததால் போலீசாரிடம் சிக்கி விடாமல் இருக்க தப்பி சென்றனர். இந்த வழக்கில் தற்போது கவுரிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லேஷ் உள்பட மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.