திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனியாக சந்தித்து பேசியது ஏன்? தி.மு.க. வேட்பாளர் கலெக்டரிடம் புகார்

திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனியாக சந்தித்து பேசியது ஏன்? என்று தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

Update: 2021-04-28 18:53 GMT
திருச்சி, 
திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனியாக சந்தித்து பேசியது ஏன்? என்று தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் புகார்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், தி.மு.க. வேட்பாளராக இனிகோ இருதயராஜும் போட்டியிட்டனர். தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று திடீரென திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர் திவ்யதர்ஷினியை சந்தித்து அவர் ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் இனிகோ இருதயராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனியாக சந்திப்பு ஏன்?

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 26-ந்தேதி தேர்தல் நடத்தும் அதிகாரி கமலக்கண்ணனுடன் சுமார் 30 நிமிட நேரம் தனியாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின்போது அலுவலக ஊழியர்கள் உள்பட யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 

இந்த சந்திப்பு நடைபெற்ற அலுவலகத்தில்தான் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட தபால் வாக்குகள் உள்ளன. தேர்தல் நடத்தும் அதிகாரி ஆளும் கட்சி வேட்பாளருடன் இப்படி தனியாக சந்தித்து பேசி இருப்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடவடிக்கை

ஆதலால் இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன். இது பற்றிய தகவல் ஏற்கனவே எனக்கு கிடைத்திருக்கிறது. அந்த அறையில் உள்ள சுழலும் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்துகிறேன் என்று கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்