நீலகிரி மாவட்டத்தில் 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் 1¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என 43 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
நீலகிரியில் சமீபத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து, 2 நாட்களுக்கு ஒரு முறை சென்னையில் இருந்து தடுப்பூசி வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, நீலகிரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக https://www.cowin.gov.in என்ற இணையதளத்தில் பெயர், வயது, ஆதார் எண் போன்றவற்றை உள்ளீடு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். நீலகிரியில் இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது 2,100 டோஸ் தடுப்பூசி இருப்பு இருக்கிறது என்றார்.