விற்பனையாகாமல் மலர் நாற்றுகள் தேக்கம்

சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், மலர் நாற்றுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து இருக்கின்றனர்.

Update: 2021-04-28 18:22 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலர் மற்றும் பழ நாற்றுகளை விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது நிலங்களில் பயிரிடுவதை தவிர அந்த நாற்றுகளை சுற்றுலா பயணிகளுக்கும் விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக குன்னூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மலர் மற்றும் பழ நாற்றுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து உள்ளன.  
இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து குன்னூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விதைகளை கொண்டு வந்து மலர் மற்றும் பழ நாற்றுகள் மட்டுமின்றி மூலிகை, கற்றாழை, அலங்கார நாற்றுகளை உற்பத்தி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு கொரோனா பரவலால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து, நாற்றுகள் விற்பனை பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வடும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் மீண்டும் கொரோனா பரவலால் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ரூ.15 லட்சம் மதிப்பிலான நாற்றுகள் தேக்கம் அடைந்து உள்ளன. 

அவை அழுகும் நிலையில் இருக்கின்றன. இதனால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவல் குறைந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே விற்பனை தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்