பூ மார்க்கெட் சாஸ்திரி மைதானத்துக்கு மாற்றம்
கூட்ட நெரிசலை சமாளிக்க பூ மார்க்கெட் சாஸ்திரி மைதானத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
கோவை
கூட்ட நெரிசலை சமாளிக்க பூ மார்க்கெட் சாஸ்திரி மைதானத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
பூ மார்க்கெட்
கோவை பூ மார்க்கெட்டில் 135 கடைகள் உள்ளன. இதில் 28 நிரந்தர கடைகளில் பூ வியாபாரம் செய்யப்படுகிறது. இதனால் இங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக வியாபாரிகள், பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட பூ மார்க்கெட் வளாகத்தில் தற்காலிகமாக கடைகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் இதை வியாபாரிகள் முழுமையாக பயன்படுத்தாமல் பழைய இடத்தில் கடைகளை வைத்து கூட்ட நெரிசலை ஏற்படுத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது.
சாஸ்திரி மைதானத்துக்கு மாற்றம்
இதைத் தொடர்ந்து பூ மார்க்கெட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பூமார்க் கெட் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த கடைகள் தகரம் வைத்து அடைக்கப்பட்டது.
மேலும் பூ வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றி வியாபாரம் செய்வதற்கு வசதியாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சாஸ்திரி மைதானத்துக்கு மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது.
எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாஸ்திரி மைதானத்தை பயன்படுத்த வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.