முககவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும்
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவரும் முக கவசம் மற்றும் கையுறை கட்டாயம் அணிய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி:
கையுறை கட்டாயம்
தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி வருகிற 2-ந்தேதி தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் நடக்கிறது.
வாக்கு எண்ணிக்கை நாளன்று இந்த மையத்தில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கான செயல்முறை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம், முகவுறை (‘பேஸ்ஷீல்டு’), கையுறை அணிந்து வர வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவதற்கு 100 மீட்டர் முன்பாக அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.
அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் போது மருத்துவ துறையினரால் நிர்ணயம் செய்யப்பட்ட உடல் வெப்பநிலை அளவை காட்டிலும் வெப்பநிலை மாறுபாடு கண்டறியும் பட்சத்தில் கண்டிப்பாக வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சமூக இடைவெளி
உடல் வெப்பநிலை மாறுபாடு காணப்படும் முகவர்களுக்கு பதிலாக வேறுநபர்கள் நியமனம் செய்ய வேட்பாளர்கள் தரப்பில் தகுதியான 2 நபர்களை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடுதலாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வேட்பாளர்கள், வாக்கு எண்ணும் முகவர்கள் அனைவரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் கண்டிப்பாக வாக்கு எண்ணும் நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பின் ஏதேனும் ஒன்றிற்கான சான்றிதழ் பெற்று வர வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் மைய நுழைவு வாயில் பகுதியிலும், வெளியேறும் பகுதியிலும் கைகழுவும் வகையில் கண்டிப்பாக கிருமி நாசினி, சோப்பு, தண்ணீர் வசதி ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
இத்தகைய அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவதை அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செயல்முறை உத்தரவு நகல் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.