பொள்ளாச்சி அருகே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு முகக்கவசம் அணிவித்து விழிப்புணர்வு

பொள்ளாச்சி அருகே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு முகக்கவசம் அணிவித்து டீக்கடை பெண் உரிமையாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2021-04-28 16:58 GMT
கிணத்துக்கடவு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் உள்பட பல்வேறு துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதன் ஒருபகுதியாக  பொதுமக்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தவமணி என்ற பெண் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வருபவர்களிடம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.

 ஆனால் சிலர் தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் கடைக்கு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து தவமணி தனது டீக்கடைக்கு எதிரே உள்ள மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்து கிராமமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 இதையடுத்து கடைக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வருகின்றனர். தலைவர்களின் சிலைக்கு முகக் கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தவமணியை கிராமமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்