குமரலிங்கம் பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் குடிநீர் எடுக்கப்படும் அமராவதி ஆற்றில் கழுவப்படுவதால் பொதுமக்கள் அச்சமடையும் நிலை உள்ளது.

குமரலிங்கம் பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் குடிநீர் எடுக்கப்படும் அமராவதி ஆற்றில் கழுவப்படுவதால் பொதுமக்கள் அச்சமடையும் நிலை உள்ளது.

Update: 2021-04-28 16:20 GMT
போடிப்பட்டி
குமரலிங்கம் பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் குடிநீர் எடுக்கப்படும் அமராவதி ஆற்றில் கழுவப்படுவதால் பொதுமக்கள் அச்சமடையும் நிலை உள்ளது.
குடிநீர்த் திட்டங்கள்
திருப்பூர், கரூர் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக அமராவதி ஆறு உள்ளது. மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு ஆகிய ஆறுகளுடன் இணைந்து பாய்ந்து வரும் அமராவதி ஆறு அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட கால அளவில் அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
 இந்த ஆற்றில் கொழுமம் பகுதியில் குதிரையாறு வந்து கலந்து குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம், கணியூர், கடத்தூர், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. ஆண் பொருனை என்று அழைக்கப்படும் அமராவதி ஆற்றின் நீளம் சுமார் 282 கிலோ மீட்டர்களாகும். அமராவதி ஆற்றை அடிப்படையாகக் கொண்டு வழியோர கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் பல இடங்களில் ஆற்றங்கரைகளை குப்பைகளைக் கொட்டி பாழாக்குதல், கழிவுநீர் கலத்தல், பன்றி வளர்ப்பு போன்ற செயல்களால் பாழாக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கழுவப்படும் வாகனங்கள்
தற்போது குமரலிங்கம் பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை அமராவதி ஆற்றில் கழுவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அமராவதி ஆற்று நீரை பல கிராம மக்கள் குடிப்பதற்காக பயன்படுத்தி வருகிறோம். மேலும் கால்நடைகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதாகவும் அமராவதி ஆறு உள்ளது. கடந்த 20-ந்தேதி முதல் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
 இதனால் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் குமரலிங்கம் ஆற்றுப்பாலத்துக்கு அருகில் ஏராளமான பொதுமக்கள் அமராவதி ஆற்றில் குளித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் இளைஞர்கள் தூண்டில்கள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பகுதியில் தொடர்ச்சியாக கனரக வாகனங்களை ஆற்றுக்குள் இறக்கி கழுவி வருகிறார்கள்.
ஆம்புலன்ஸ்கள்
 அதிலும் சில நேரங்களில் ஆம்புலன்ஸ்களையும் ஆற்றுக்குள் நிறுத்தி கழுவுகிறார்கள். ஆம்புலன்ஸிலிருக்கும் ரத்தக்கறைகள் போன்றவை ஆற்றில் கழுவி விடப்படும் நிலை உள்ளதால் அருவெறுப்பு ஏற்படுகிறது. 
தற்போது கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்படும் நோயாளிகளுக்கு தொற்று பாதிப்பு இருந்தால் அருகில் குளிக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் மூலம் பரவுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை அமராவதி ஆற்றில் கழுவுவதற்குத் தடை விதிக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.
========

மேலும் செய்திகள்