தற்கொலை செய்வதற்காக மலையில் ஏறிய பெண்

கணவர் பெயரில் உள்ள வீட்டை எழுதி கேட்டு, தற்கொலை செய்வதற்காக மலையில் ஏறிய பெண்ணை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

Update: 2021-04-28 15:47 GMT
வடமதுரை:

மலையில் ஏறிய பெண்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் இருந்து, சிக்காலிபட்டி செல்லும் சாலையில் கல்குவாரி ஒன்று உள்ளது. அதன் அருகே உள்ள மலை மீது நேற்று முன்தினம் இரவு பெண் ஒருவர் ஏறி தற்கொலை செய்யும் நோக்கில் அமர்ந்திருந்தார். இதனைக்கண்ட அப்பகுதி் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ஜோதிராமலிங்கம் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் மலைமீது ஏறி சென்று, தீயணைப்பு படையினர் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு, அவரை சமாதானம் செய்து பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர். 

பின்னர் அந்த பெண், வடமதுரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், எரியோடு பண்ணைபட்டியை சேர்ந்த வசந்தி (வயது 35) என்று தெரியவந்தது.

கணவர் பெயரில் வீடு

 வசந்திக்கும், வடமதுரை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பெரியசாமிக்கும் திருமணம் முடிந்து ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி இறந்து விட்டார். அதன்பிறகு பண்ணைபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசந்தி வசித்து வந்தார். 

வசந்தியின் கணவர் பெரியசாமி பெயரில் வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு தனது மாமியாரிடம் வசந்தி கேட்டார். இதற்கு அவருடைய மாமியார் மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் விரக்தியடைந்த வசந்தி, தற்கொலை செய்யும் நோக்கத்தில் மலைமீது ஏறி அமர்ந்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்