கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை காரைக்கால் கலெக்டர் எச்சரிக்கை

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-04-28 14:50 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி கவர்னர் தலைமையில் நடந்த உயர்மட்ட குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி சில கட்டுப்பாடுகள் வருகிற 30-ந் தேதி வரை அமலில் இருக்கும். குறிப்பாக இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

அதிகாலை 5 மணிக்கு மேல், காய்கறி, மளிகை, பழங்கள், பால், இறைச்சி மற்றும் மீன், அரிசி கடைகள் போன்றவை திறக்க அனுமதி அளிக்கப்படும். அதே சமயம் வணிகவளாகம், மால்கள் செயல்பட அனுமதிக்கப்படாது. சூப்பர் மார்க்கெட், பெரிய உணவகங்கள் பார்சல் மற்றும் டோர் டெலிவரி மட்டுமே செய்யலாம்.

மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், மருந்தகங்கள், செய்தித்தாள்கள் வினியோகம், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ அவசரகால செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும். பொது போக்குவரத்து, விவசாய பொருட்கள் ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் எந்த தடையும் இல்லை.

கார், வாடகை வாகனங்கள் டிரைவர்களை தவிர்த்து 2 பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும். ஓட்டுனரை சேர்க்காமல் ஆட்டோக்களில் 2 பயணிகள் வரை பயணம் செய்யலாம். அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். இறுதி சடங்குகளில் 25 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது.

தொழில்துறை உற்பத்தியும் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்படும். பெட்ரோல் பங்குகள், வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்படும்.

ஊரடங்கின்போது, அதிகப்படியான கூட்டம் கூடுவதை பொதுமக்கள் தாமாக முன்வந்து தவிர்க்கவேண்டும். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, துணை கலெக்டர் ஆதர்ஷ் உடன் இருந்தார்.

முன்னதாக ஒரு ரூபாய்க்கு முக கவசம், ரூ.10-க்கு சானிடைசர் விற்பனையை காரைக்கால் பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்