பொதுமக்கள் வராததால் மதகடிப்பட்டு வாரச்சந்தை வெறிச்சோடியது

பொதுமக்கள் வராததால் மதடிகப்பட்டு வாரச்சந்தை வெறிச்சோடியது.

Update: 2021-04-28 14:42 GMT
திருபுவனை, 

புதுவை மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு விற்பனை செய்யப்படும் வீட்டு உபயோக பொருட்கள், காய்கறி உள்ளிட்டவைகளை திருபுவனை, மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில் உள்பட சுற்று வட்டாரங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வாங்க வருவார்கள்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக இந்த வாரச்சந்தை மூடப்படுவதாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையொட்டி நேற்று வாரச்சந்தை நடைபெறவில்லை. பொதுமக்கள் யாரும் வராததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. சந்தை மூடப்பட்டதால் அதனை நம்பியுள்ள சிறு, குறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இருப்பினும் சந்தை மூடப்பட்டது தெரியாமல் ஒருசில வியாபாரிகள் சந்தைக்கு வந்தனர். ஆனால் அவர்களை சந்தையில் வியாபாரம் செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர்கள் சந்தைக்கு அருகில் உள்ள புதுச்சேரி-விழுப்புரம் சாலையோரத்தில் அமர்ந்து வியாபாரம் செய்தனர்.

திருவண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு பகுதியில் இருந்த கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட்டன. அதன்பிறகு செயல்பட்ட கடைகளை மூடும்படி போலீசார் அறிவுறுத்தினர். அப்போது ஒரு சில வியாபாரிகள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்