3 குழந்தைகள் இருப்பதை மறைத்து வேலையில் சேர்ந்த ஜெயில் பெண் சூப்பிரண்டு பணி நீக்கம் மாநில அரசு அதிரடி
3 குழந்தைகள் இருப்பதை மறைத்து அரசு வேலையில் சேர்ந்த ஜெயில் பெண் சூப்பிரண்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மராட்டிய தேர்வாணைய தேர்வில் (எம்.பி.எஸ்.சி.) வெற்றி பெற்று கடந்த 2012-ம் ஆண்டு மாநில சிறைத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் சுவாதி ஜோக்தந்த். இவர் புனே ஜெயில் சூப்பிரண்டாக இருந்து வந்தார். இந்தநிலையில் அவர் 3 குழந்தைகள் இருப்பதை மறைத்து அரசு பணியில் சேர்ந்ததாக கடந்த 2016-ம் ஆண்டு புகார் வந்தது.
மராட்டிய அரசு விதிகளின்படி, 2005-ம் ஆண்டுக்கு பிறகு ஒருவருக்கு 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர் அரசு பணியில் சேர தகுதியற்றவர் ஆவார். எனவே பெண் அதிகாரி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பெண் அதிகாரிக்கு 3 பிள்ளைகள் இருப்பதும், இதில் 3-வது பிள்ளை அவர் பணியில் சேரும் முன்பே (2007-ம் ஆண்டு) பிறந்ததும் தெரியவந்தது.
எனவே 3 பிள்ளைகள் இருப்பதை மறைத்து அரசு பணியில் சேர்ந்த பெண் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை துணை செயலாளர் என்.எஸ். காரட் பிறப்பித்து உள்ளார்.
மேலும் இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘சுவாதி ஜோக்தந்த் அரசு வேலையில் சேரும் முன்பே அவருக்கு 3 பிள்ளைகள் இருந்து உள்ளது. ஆனால் அவர் அந்த தகவலை மறைத்து உள்ளார். மாநில அரசை ஏமாற்றி வேலையை பெற்று இருக்கிறார்.
விசாரணையின் போது தான் அவர் அரசு விதியில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரினார். எனவே அவர் விலக்கு பெறும் தகுதியையும் இழந்துவிட்டார்’’ என கூறப்பட்டுள்ளது.