காயல்பட்டினத்தில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு
காயல்பட்டினத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். மேலும் 9 பெருக்கு தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயல்பட்டினத்தில் பாதிப்பு
ஆறுமுகநேரி, காயல்பட்டினம், பகுதியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் ஓடக்கரையைச் சேர்ந்த ஒரு பெண்ணும், மரைக்கார் பள்ளி தெருவை சேர்ந்த 52 வயது ஆணும் காய்ச்சல் முற்றிய நிலையில் தனியாரிடம் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
2 பேர் சாவு
நோய் குணமடையாத நிலையில், பெண் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், ஆண் பாளையங் கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அந்த 2 பேரும் இறந்தனர்.
இதை தொடர்ந்து பெரிய நெசவுத்தெரு, சதுக்கை தெரு, நைனார்தெரு ஆகிய இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாமில் காயல்பட்டினத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ெதாடர்்ந்து காயல்பட்டினத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறுமுகநேரியில்...
மேலும், ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெருவில் ஒரே வீட்டில் 3 பேருக்கும், ஆறுமுகநேரி போலீஸ் காவலர் குடியிருப்பில் ஆத்தூரில் வேலை பார்த்து வரும் போலீஸ்காரர் ஒருவர் வீட்டில் இரண்டு பேருக்கும், மேலும் அடுத்த வீட்டில் உள்ள மற்றொரு போலீஸ்காரர் வீட்டில் 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ஆறுமுகநேரி ஜெயின் நகரில் 3 பெண்கள், ஒரு ஆணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு சுப்பிரமணியபுரத்தில் ஒருவருக்கும், ஏ.ஐ.டி.யு.சி. காலணியில் 2 பேருக்கும், எஸ்.ஆர்.எஸ். கார்டனில் ஒருவருக்கும், மூலக்கரையில் ஒருவருக்கும், நல்லூரில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக ஒரேநாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கிருமிநாசினி தெளிப்பு
அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து சார்பில் கிருமிநாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது, போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் பார்வையிட்டார்.