கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல்-கலெக்டர் ராமன் தகவல்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.

Update: 2021-04-27 23:37 GMT
சேலம்:
கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.
மருத்துவ முகாம்கள்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
கொரோனா வைரஸ் அதிகரிப்பை தடுக்க பொதுமக்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். பொது இடங்கள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
விழிப்புணர்வு
அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்றுவதையும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிவதையும், ஒவ்வொரு கடைகளின் முகப்பில் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிருமி நாசினி திரவம் வைப்பதை உறுதி படுத்த வேண்டும்.  கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அபராதம்
முக கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்க வேண்டும். தொடர்ந்து முக கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இது வரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத 74 ஆயிரத்து 684 தனி நபர் மற்றும் பல்வேறு கடைகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து இதுவரை ரூ.1 கோடியே 62 லட்சத்து 53 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்நோய் பரவாமல் கட்டுப்படுத்திட முடியும். எனவே, பொதுமக்கள் அரசு மேற்கொண்டுவரும் அனைத்து நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், திட்ட இயக்குனர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்