சேலம் அருகே அம்பேத்கர் சிலை அவமதிப்பு-அரசியல் கட்சியினர் சாலை மறியல்
சேலம் அருகே அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கருப்பூர்:
சேலம் அருகே அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அம்பேத்கர் சிலை அவமதிப்பு
சேலம் அருகே கருப்பூர் வெள்ளாளப்பட்டி சந்தைப்பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையை நேற்றுமுன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் அவமதிப்பு செய்திருந்தனர். நேற்று காலை அதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலாளர் மணிக்குமார், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு நிர்வாகி பாவேந்தன், ஓமலூர் தொகுதி துணைச் செயலாளர் பாக்கியராஜ், சேலம் மாநகர பொருளாளர் காஜா மைதீன், மாவட்ட இளைஞர் எழுச்சி அணி சாம்ராஜ், அம்பேத்கர் மக்கள் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் அம்பேத், பகுஜன் சமாஜ் கட்சி வக்கீல் சடையன், கோட்ட கவுண்டம்பட்டி சிவராஜ் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.
சாலை மறியல்
பின்னர் அவர்கள் கருப்பூர்-வெள்ளாளப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகர், சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தெய்வீக சிகாமணி, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி, ஓமலூர் தாசில்தார் அருள்பிரகாசம் மற்றும் அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்களிடம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும், 3-வது முறையாக அம்பேத்கர் சிலையை இதுபோன்று அவமரியாதை செய்துள்ளனர். எனவே சிலையை சுற்றி கம்பி வேலி அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு போலீசார், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். நேற்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை சாலை மறியல் போராட்டம் நடந்தது. மேலும் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொழிலாளி கைது
இந்த சம்பவம் தொடர்பாக கருப்பூர் போலீசார் அந்த பகுதியில் ஒரு வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் சிலையை அவமதிப்பு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜூ (வயது 55) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் குடிபோதையில் அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.